செந்தமிழ்சிற்பிகள்

கீ.இராமலிங்கனார் (1899-1986)

கீ.இராமலிங்கனார் (1899-1986)

அறிமுகம்

ஆட்சி மொழியாகத் தமிழ் அரியாசனம் ஏறவேண்டுமென்ற முனைப்பில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி, செயற்கரிய பணி செய்தவர் அறிஞர் கீ. இராமலிங்கனார்.

சென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரி என்னும் கிராமத்தில் இரத்தின முதலியார் பாக்கியத்தம்மாள் இணையருக்கு 1899 ஆம் ஆண்டு இராமலிங்கனார் பிறந்தார் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியில் பயின்றார்.  சீயோன்பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தார்.  வெஸ்லிகல்லூரியில் பயின்றபோது தமிழ்த் தென்றல்திரு.வி.க. விடமும், ‘சைவப் பாதிரியார்சச்சிதானந்தம் பிள்ளையிடமும் கல்வி கற்றார். பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.

அறிஞர் கீ. இராமலிங்கனார் தமிழகத் தலைமைச் செயலகத்தில் மேனிலை எழுத்தராகவும், சார் பதிவாளராகவும், நகரவை ஆணையராகவும், கல்லூரி முதல்வராகவும், தொழிலாளர் நல அலுவலகராகவும் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்தார்.  எந்நிலையிலும், எந்தொழிலைச் செய்தாலும், தமிழின் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர். தமிழின் வல்லமையைத் தமது சொல்லாலும், செயலாலும் தமிழருக்கு உணர்த்திய தமிழ்ச் செம்மல்.

தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகத் தமிழைப் பயன்படுத்த இயலுமாஆங்கிலத்தில் எழுதுவது போல், தமிழில் எழுத முடியுமாதமிழில் எழுதினால் வரைவுகளும், குறிப்புகளும் பிறருக்குப் புரியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் தமிழர்கள்சிலர்.

 அனைத்துத் தடைகளையும், எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, தமிழகத்தில் 1956 ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம்நிறைவேற்றப்பட்டது.  ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலம் முன்னரே, அறிஞர் கீ.இராமலிங்கனார், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கினார்.  தாம் தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  ஆட்சிச் சொல்என்னும் அந்நூல், அவரது தமிழ்த் திறத்தையும், தமிழுணர்வையும், தமிழார்வத்தையும் வெளிப்படுத்தியது.

தமது இறுதி மூச்சுள்ளவரை தமிழின் செழுமைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய அறிஞர் கீ.இராமலிங்கனார் 1986 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.  ஆட்சி மொழித் தமிழுக்குப் பாடுபட்ட அவரது பெயர் தமிழ் மொழி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

கீ. இராமலிங்கனார் 1930-இலிருந்து எழுதிய 17 நூல்கள்

இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு குமரன் அச்சகம், காஞ்சிபுரம் - 1930 வழிகாட்டும் வான்பொருள்” - இரெட்டியப்பட்டி அடிகளார் சங்கம், அருள் நகர், அரசூர் (அஞ்சல்)

உண்மை நெறி விளக்கம்” - ஆராய்ச்சி உரை, தென் ஆர்க்காடு மாவட்டம் - 1936

நகராட்சி முறை - உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் தமிழைப் பயன்படுத்த உதவுவது, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு - 1954

திருவெம்ன்பாவை - விளக்கத் தெளிவுரை, தருமயாதீன வெளியீடு - 1955

தமிழ் ஆட்சிச் சொற்கள் - ஆட்சிச் சொல் ஆக்கும் முறையை விளக்குவது. விசாலாட்சிப் பதிப்பகம், மதுரை - 1959.

ஆட்சித்துறைத் தமிழ் - அரசு அலுவலகங்களில் பயன்படுத்துதற்குரிய சொற்கள், தொடர்கள், வரைவுகள், குறிப்புகள், அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்களால் வெளியிடப்பெற்றது.; சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு - 1968.

தமிழ் மண முறை - இலக்கிய மேற்கோளுடன் வெளியிட்டவர் இரா. முத்துக்குமாரசாமி, தமிழ் ஆட்சியர், வாலாசாபாத்து, செங்கற்பட்டு மாவட்டம். சங்கர இராமசாமி - பரமேசுவரி ஆகியோர் தமிழ்த் திருமணத்தினை நிகழ்த்தி வைத்து கீ.இராமலிங்கனார் அவர்களால் 18-01-1973 -அன்று வாலாஜாபாத்தில் வெளியிடப்பட்டது.

ஆட்சித் தமிழ் - அன்றுமுதல் இன்றுவரை, சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு - 1977.

தமிழில் எழுதுவோம்” - தமிழில் ஆட்சி நடத்த ஊக்குவிப்பது. அமைச்சர் வீரப்பன் தலைமையில் வெளியிடப்பெற்றது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

திருமுறைச் சமுதாயம்” - ஆராய்ச்சி நூல். மாம்பாக்கம், குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.

ஐந்து நிலைகள்” - ஆராய்ச்சி நூல், மாம்பாக்கம் குருகுல அருள்மிகு அழகரடிகள் வெளியீடு.

Tamil Marriages, Modes of Performance and Significance, Translation of my talk in Tamil published by the Institute of Tradtional Culture, Madras University

ஆட்சிச் சொல் அகராதி - பொது - செம்மை செய்தும், ஆக்கியும் பெருக்கியது. முதல் இரண்டு பதிப்புகள், 1958 - 1964, அரசினர் வெளியீடு. ஆ. துறைச் சொற்கள்” - செம்மை செய்ததும், ஆக்கியதும் - துறைக்கு ஒரு சுவடியாக - அரசினர் வெளியீடு - 1958 - 1964.

தொழிலாளர் சட்டத் தொகுப்பு (Labour code). அரசு பணித்தவாறு மொழிபெயர்த்துத் தந்தது. - 1974.

புதுக்கோட்டை மாவட்டச் சுவடி (ஒரு பகுதி) - அரசு பணித்தவாறு மொழி பெயர்த்துத் தந்தது - 1975

தமிழ்த் திருமணம் - முறை விளக்கமும், செய்முறையும், தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம், குமரன் அச்சகம், காஞ்சிபுரம்.